Hafsa Ladies Arabic College | Weligama, Sri Lanka
அறிவும் ஒழுக்கமும்

ஹப்ஸா மகளிர் அரபுக் கல்லூரி

இஸ்லாமிய அறிவு, அரபு மொழி, குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஒழுக்கப் பயிற்சியில் பெண்களுக்கான கல்விப் பயணத்தை அழகாக உருவாக்கும் கல்வி நிலையம்.

Latest News

ஆஇஷா பின்து அபீபக்ர் (ரலி) : عائشة بنت أبي بكر

ஆஇஷா பின்து அபீபக்ர் (ரலி) : عائشة بنت أبي بكر

உம்மு ரூமான் (ரலி) அபுபக்கர் (ரலி) ஆகிய இருவருக்கும் பிறந்த செல்வம் தான் ஆயிஷா (ரலி) ஆவர்கள். நுபுவ்வத் 4 அல்லது 5ம் ஆண்டு மக்காவில் குரைஷக் கோத்திரத்தில் பனூ தைம் கிளையில் பிறந்தார்கள். ஹிஜ்ரத்திற்கு ஓரிண்டு ஆண்டுகளுக்கு முன் அன்னயவர்களுக்கு ஆறு வயதிருக்கும் போது நபியவர்கள் இவர்களை மணமுடித்தார்கள். பின் தனது தாயுடன் மதீனாவிற்குச் சென்றார்கள். அங்கு ஹிஜ்ரி 2ம் ஆண்டு நபியவர்கள் இவர்களுடைய 9ம் வயதில் உறவுகொண்டார்கள். அவர்கள் மிக அழகாக இருந்ததன் காரணமாக அல்ஹுமைரா (செக்கச்சிவந்தவள்) என்றழைக்கப்பட்டார்கள். அவர்களின் சிறப்புக்கள் பின்வருமாறு :

  • வானவர் தூதர் ஜிப்ரில் (அலை) அவர்கள் அன்னையவர்களின் உருவத்தை பச்சைப் பட்டில் வைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கனவில் அன்னையவர்களின் உருவத்தைக் காண்பித்து, இவர் தான் இந்த உலகிலும், மறு உலகிலும் உங்களுக்கு மனைவியாக வாய்க்கப் போகின்ற பெண்மணி என்ற நன்மாரயத்தைப் பெற்றுக் கொண்டவர்களும்,
  • இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்ட பெண்களில் கன்னிப் பெண்ணாக இருந்த நிலையில் மணமுடிக்கப்பட்டவரும்,
  • இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி வாழ்வு அன்னையவர்களின் மடியில் கழிந்தது. இன்னும் அன்னையவர்கள் வசித்த இல்லத்தில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடக்கமும் செய்யப்பட்டார்கள்.
  • இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அன்னையவர்களும் ஒன்றாக இருந்த பல சமயங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வானவர் தலைவர் ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலமாக வஹி அருளப்பட்ட நற்பெயருக்கு உரித்தானவரும்,
  • இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழர், உற்ற நண்பர் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் மகளும்,
  • அன்னையவர்களின் மீது களங்கம் சுமத்தப்பட்ட பொழுது, அத்தகைய களங்கத்திற்கு சொந்தக்காரரல்ல என்று இறைவனே சாட்சியமளித்து திருமறை வசனத்தை அன்னையின் பொருட்டால் இறங்கிய நற்பேற்றுக்கும் உரித்தானவரும்,
  • முஸ்லிமாகவே பிறந்து, முஸ்லிமாகவே வளர்க்கப்பட்டவரும், மிகவும் பரிசுத்தமான சூழ்நிலையில் வார்த்தெடுக்கப்பட்டவரும்,
  • வல்லோனானாம் அல்லாஹ் தனது மன்னிப்பையும், பேரருட் கொடைகளையும் அன்னைக்கு வழங்க இருப்பதாக வாக்குறுதி அளித்த அதிர்ஷ்டத்தையும் பெற்றுக் கொண்டவர்களாவார்கள்.
  • அனைத்து பெண்களிலும் அன்னலாருக்கு மிகவும் விருப்பத்திற்குரிய பெண்மணி.
  • அதிக ஹதீஸ்களை அறிவித்த அனைத்து நபித்தோழர்களிலும் மூன்றாமிடத்திலும், பெண்களில் முதலிடத்திலும் இருப்பவர் மட்டுமல்ல, ஒட்டுமத்த பெண்களில் மார்க்கத்தில் மிகத்தெளிவானவரும் இவரே.
  • தனக்கு நோன்பு திறக்க ஏதுமில்லை என்பதைக் கூட மறந்த நிலையில் அதிகமதிகம் வாரிவழங்குபவர்.

ஒருமுறை அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே! இந்த உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர் யாராக இருக்கும்? என வினவிய பொழுது, ஆயிஷா (ரலி) அவர்கள் தான் இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமான நபர் என்று பதிலளித்தார்கள். பின்பு, ஆண்களில் யார் என வினவிய பொழுது, அபுபக்கர் சித்தீக் (ரலி) என்று பதிலளித்தார்கள். (புஹாரி, முஸ்லிம்).

அன்னையவர்களின் 18ம் வயதில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையரின் வீட்டில், அன்னையரின் நாளில், அன்னையரின் மடியில் மரணமடைந்தார்கள். அதன் பின் தனது எஞ்சிய வாழ்கை முழுவதையும் மார்க்கத்தைப் பரப்புவதில் ஈடுபடுத்தினார்கள். நபித்தோழர்களில் பலர் தமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு அன்னையரிடத்தில் திரைக்குப் பின்னாலிருந்து கேட்பார்கள்.

ஹிஜ்ரி 57ம் ஆண்டு ரமழான் 17ம் நாள் இரவு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மரணித்தார்கள். அவர்கள் இறக்குமுன் இரண்டு விடயங்களை வஸிய்யத் செய்தார்கள்.

  1. அவர்கள் மரணித்தால் நபியவர்களின் ஏனைய மனைவியரைப்போல் தன்னையும் மதீனாவில் ஜன்னதுல் பகீஇல் அடக்கம் செய்யப்பட வேண்டும்.
  2. தனது ஜனாஸாத் தொழுகையை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் நடத்த வேண்டும்.

அவர்களின் வஸிய்யத் பிரகாரமே காரியங்கள் நிறைவேற்றப்பட்டன. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக.

உங்கள் கருத்தை எழுதுங்கள்
கருத்துகள்

கருத்துகள் இல்லை.