இக்கலாசாலையின் பாடத்திட்டம் ஐந்து வருடங்களைக் கொண்டதாகும். இஸ்லாமிய ஷரீஆ, அரபு மொழி சார்ந்த கலைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டத்தில் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைகளுக்கான பாடங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. மனையியல், மற்றும் கணனிப் பயிற்சி நெறி, முதலுதவி பயிற்சி என்பனவும் இங்கு மேலதிகப் பாடங்களாகப் போதிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி நெறி, மற்றும் தாதிப் பயிற்சி நெறிகளும் போதிக்கப்பட இருக்கின்றன. பட்டமளிப்பு விழாக்களின் போது மாணவிகளால் நடத்தப்படும் தையல், கைப்பணிக் கண்காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. பட்டம் பெற்று வெளியேறும் ஒவ்வொரு மாணவிக்கும் ஒரு தையல் இயந்திரம் பரிசாக வழங்கப்படுகிறது. இது வரை சரீஆப் பிரிவில் 128 மாணவிகள் பட்டம் பெற்று வெளியாகியோள்ளனர்.
திருக்குர்ஆன் மன்னப் பிரிவில் 45 மாணவிகள் ஹிப்ளை முடித்துவிட்டு ஷரீஆப் பிரிவில் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.
மாணவிகளின் உளவியல், அறிவியல், ஆற்றல் அபிவிருத்தியைக் குறிக்கோளாகக் கொண்டு பாடத்திட்டத்திற்கு மேலதிகமாக நடாத்தப்படுகின்ற கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பாசறைகள் பற்றியும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.
ஸவூதி அராபிய உளவியல் துறை பேராசிரியரான அஷ்ஷைக் அப்துல்லாஹ் அல்ஹஸ்லூல் என்பவரால் நடத்தப்பட்ட, “கால முகாமைத்துவம்”, றியாத் பல்கலைக் கழப் பேராசிரியர் அப்துள்ளா அல் கஈத் என்பவரால் நடத்தப்பட்ட “கற்பித்தல் அணுகுமுறைகள்”, ரியாத் பல்கலைக்கழக பேராசிரியர் அஷ்ஷைக் கலாநிதி உமர் பின் ஸஊத் அல்ஈத் நடத்திய “தஃவாவும் அதன் அணுகு முறைகளும்”, ரியாத் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷைக் அப்துல்லாஹ் அல்முஅய்தீ நடத்திய “இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகள்” - ஸவூதி அராபிய பல்கலைக்கழக சகோதரி ஹுலுத் பின்த் காலித் அத் தாவூத் நடத்திய “ஏகத்துவ வழிகாட்டி”, டாக்டர் மாரீனா தாஹா ரிபாய் நடத்திய “கருத்தூட்டல்”, டாக்டர் ஸைனப் ஸுபைர் நடத்திய “சுகவாழ்வு ” பற்றிய கருத்தரங்கு அப்ஹா மன்னர் காலித் பல்கலைக்கழக பேராசிரியர்களால் நடாத்தப்பட்ட பயிற்சிநெறி என்பன அவற்றுள் சிலவாகும்.